banner

நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 19 அக்டோபர், 2016

விபுலாநந்த அடிகளாரின் “வெள்ளைநிற மல்லிகையோ” இசைப்பாடல் உருவாக்கம்(காணொளி)…தவத்திரு விபுலாநந்த அடிகளாரின் வாழ்வியலை ஆவணப் படமாக்கும் பணியில் கடந்த ஆறு திங்களாக உழைத்துவருவதை நெருங்கிய நண்பர்கள் பலரும் அறிவார்கள். பல்லாயிரம் கல் சுற்றுச்செலவு, பல நூல்களில் மூழ்கியமை, பல கையெழுத்துப்படிகளைக் கண்டுபிடித்தமை, பல நூறுபேரை நேர்காணல் செய்தமை, பல நூறு அறிஞர்களிடம் கருத்துரை பெற்றமை, துறவியர்கள் பலரின் நெறிகாட்டலைப் பெற்றமை, தவத்திரு அடிகளாரின் உறவினர்களைக் கண்டு உரையாடியமை, அடிகளார் திருவடி பதிந்த இடங்களைப் பார்வையிட்டமை என இதுவரை நடந்துள்ள பணிகள் எண்ணற்றனவாம்.

தவத்திரு விபுலாநந்த அடிகளார் இயற்றிய “வெள்ளைநிற மல்லிகையோ” எனத் தொடங்கும் பாடலை இலங்கையிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் வாழும் இசையார்வலர்களின் வாய்மொழியில் கேட்டுள்ளேன். இப்பாடல் பரவுவதற்குப் பலர் தொண்டுபுரிந்துள்ளனர்; ஆனாலும் இந்தப் பாடல் போதிய அளவு பரவலாக்கம் பெறாமல் உள்ளதை உணர்ந்தேன். எனவே உலகத் தமிழர்கள் நடத்தும் பெருவிழாக்களில் பாடியும், ஆடியும் மகிழத்தக்க வகையில் இந்தப் பாடல் பரவும்வகை செய்தல் வேண்டும் என்று எண்ணி, எங்களின் ஆவணப்படத்திற்காக இந்தப் பாடலைத் தக்க இசைக்கலைஞர்கள் வழியாகப் பாடச்செய்து, ஒலிப்பதிவு செய்ய நினைத்தேன்.

“வெள்ளைநிற மல்லிகையோ” பாடலுக்கான காட்சியமைப்புகளை இலங்கையில் படம்பிடித்தோம். தமிழகத்திலும் நாட்டியக் கலைஞர்களின் துணையுடன் இப்பாடல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் எங்களின் ஆவணப்படத்தில் இப்பாடல் உரிய வடிவில் வெளிவருவதற்கு முன்பாக, இதில் ஈடுபாட்டுடன் உழைத்துப் பாடலுக்கு இசையுயிர் ஊட்டிய இசைக்கலைஞர்களின் உழைப்பினை அனைவரும் அறிவதற்குப் பாடல் பதிவுக் காட்சியை முதலில் வெளிப்படுத்த நினைத்தோம். அவ்வகையில் பதிவுசெய்யப்பெற்ற காட்சியை உலகத் தமிழர்களின் பார்வைக்கு முதலில் வைக்கின்றோம்.

பாடலைப் பாடுவதற்குரிய முதல் கலந்துரையாடலில் இசையறிஞர் பி. கோவிந்தராசனார் (அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மேனாள் பேராசிரியர்) கலைமாமணி இராஜமாணிக்கம், இரஞ்சனி இராஜமாணிக்கம் ஆகியோர் கலந்துகொண்டு அரிய கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். மிகச் சிறந்த இசைக்கலைஞராக வளர்ந்துவரும் புல்லாங்குழல் வல்லுநர் தம்பி இராஜ்குமார் இராஜமாணிக்கம் “வெள்ளைநிற மல்லிகையோ” என்ற பாடலை இசையமைத்துப் பாடி உதவினார். அவருக்கு உதவியாக ‘இசைஞானமணி’ திருமுடி சே. அருண், கலைமாமணி அழகு. இராமசாமி, ப. பிரபாகரன் உள்ளிட்ட இசைக்கலைஞர்கள் கருவியிசை கூட்டி எங்களுக்கு உதவினர். ரெட்மீடியா கலைக்கூடத்தினர் சிறப்பாகப் பதிவு செய்து எங்களுக்கு வழங்கினர்.

விபுலாநந்தரின் தமிழ்ப்பணிகளையும், வாழ்வியலையும் பதிவுசெய்வதற்கு அருந்துணையாக வாய்த்த திரு. சிவம் வேலுப்பிள்ளை (கனடா), திரு. காசுபதி நடராசா(இலங்கை) உள்ளிட்ட அன்பர்களுக்கும் கனடா, இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, குவைத்து உள்ளிட்ட நாடுகளில் இயங்கிவரும் பல்வேறு தமிழமைப்பினருக்கும், அறிஞர்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கின்றோம். “இசைத்தமிழின் இலங்கைமுகம்” என்ற தலைப்பில் தவத்திரு விபுலாநந்தரின் வாழ்வியலை விளக்கும் கட்டுரையை வெளியிட்டு உதவிய தி இந்து(தமிழ்) நாளிதழுக்கு எங்களின் மனம் நிறைந்த நன்றி உரியதாகும்.

தவத்திரு விபுலாநந்த அடிகளாரின் பாடலை வரவேற்று, எங்கள் முயற்சிக்கு வாழ்த்துரைப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் இந்தப் பாடலை உலகத் தமிழர்களின் காதுகளுக்கும் கண்களுக்கும் பெருவிருந்தாக வழங்குவதில் நெஞ்சம் நிறைவடைகின்றோம்.

காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்


தொடர்புக்கு: muelangovan@gmail.com

செவ்வாய், 18 அக்டோபர், 2016

பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில் இணையத் தமிழ் அறிமுகம்

பயிற்சியில் கலந்துகொண்டோரில் ஒரு பகுதியினர்


சத்தியமங்கலத்தில் உள்ள புகழ்பெற்ற கல்வி நிறுவனமான பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில் இணையத்தமிழ் குறித்த பயிலரங்கம்17.10.2016 அன்று நடைபெற்றது. முத்தமிழ் மன்றம் சார்பில் நடைபெற்ற பயிலரங்கில் கல்லூரியின் பேராசிரியர்கள், மாணவர்கள் என அறுபதிற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஆர்வமுடன் பயிற்சி பெற்றனர். முத்தமிழ் மன்றத்தின் பொறுப்பாளர் பேராசிரியர் மாலதி மகாலிங்கம் அவர்கள் வரவேற்று, நிகழ்ச்சி குறித்த நோக்கத்தினை எடுத்துரைத்தார். முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு, காலை அமர்விலும், பிற்பகல் அமர்விலுமாகச் சற்றொப்ப மூன்றரைமணி நேரம் தமிழ் இணைய வளர்ச்சி குறித்த செய்திகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்து அனைவரும் வலைப்பதிவில் எழுத வரும்படி வேண்டுகோள் விடுத்தார். தங்கள் துறைசார்ந்த செய்திகளை வலைப்பதிவில் பதிந்து வைக்கவேண்டியதன் தேவையை வலியுறுத்தியவுடன், பொறியியல் பயிலும் பல மாணவர்கள் தமிழில் வலைப்பதிவு செய்வதை அறிந்துகொண்டு, தங்கள் படைப்புகளை வலைப்பதிவில் பதிவுசெய்தனர்.

இணையத்தமிழ்ப் பயிலரங்கத்திற்கான ஏற்பாடுகளை செல்வி. யோக நந்தினி, செல்வன். தருண்குமார் உள்ளிட்ட முத்தமிழ் மன்றத்தின் மாணவப் பொறியாளர்கள் செய்திருந்தனர்.

பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி கல்விக்கும் கட்டுப்பாட்டிற்கும் பெயர்பெற்ற கல்லூரியாகும்.  மிகச்சிறந்த கட்டடங்களும்,  ஆய்வுக்கூடங்களும்,  நூலகமும்விடுதிகளும், ஆசிரியர் குடியிருப்புகளும்,  தோட்டங்களும்,  சாலை வசதிகளும் கொண்டு சிறப்புடன் விளங்குகின்றது. சற்றொப்ப ஏழாயிரம் மாணவர்கள் கல்வி பயில்வதாக அறிந்தேன். ஒவ்வொரு ஆண்டும் இக்கல்லூரியில் மாணவர்கள் ஏற்பாடு செய்யும் பொங்கல் விழா குறிப்பிடத்தக்க ஒருநிகழ்வாக  நடைபெறுகின்றது.  பொறியியல் கல்லூரியில் தமிழ்ப்பற்றுடன் மாணவர்கள் விளங்கி, முத்தமிழ் மன்றத்தைச் சிறப்பாக நடத்துவதும் பொங்கல் விழாவை அனைவரும் உணர்வுபூர்வமாகப் பங்கேற்கும் விழாவாக மாற்றியிருப்பதும் பாராட்டிற்கு உரியனவாகும். இத்தகு பெருமைக்குரிய கல்வி நிறுவனத்தைச் சிறப்பாக நிர்வகித்து,  மாணவர்களின் கல்விக்கண் திறக்கும் கல்லூரியின் தலைவர் திரு.எஸ்.வி. பாலசுப்பிரமணியம் ஐயா நம் வணக்கத்திற்கும் பாராட்டிற்கும் உரியவர் ஆவார்கள்.
பார்வையாளர்(ஒருபகுதியினர்)

மு.இ. பயிற்சி


தொடக்க விழாவில்...